துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டபூர்வமானதல்ல – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டபூர்வமானதல்ல என உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர் குழாம் இன்று(17) ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பிற்கு எதிராக ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது தாய் மற்றும் சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாத்தினால் துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

பின்னர் பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டை ஆராய்ந்த உயர் நீதின்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம், மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீண்டும் உறுதிபடுத்தியிருந்தது.

ஜனாதிபதி தேர்தலினால் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஸவினால் 5 பிரதிவாதிகளில் ஒருவராக இருந்த துமிந்த சில்வாவிற்கு மாத்திரம் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.

அதன்பின்னர் அதனை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் 3 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

பிரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கிய செயற்பாடு சட்டபூர்வமானதல்ல என அந்த நீதியரசர்கள் குழாம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

Reported by:S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *