முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக, தினமும் 4 மணி நேரத்துக்கு தாக்குதல் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசி மூலம் அதிபா் ஜோ பைடன் திங்கள்கிழமை தொடா்பு கொண்டாா்.
அப்போது, காஸாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு அந்தப் பகுதியில் தாக்குதலை நிறுத்திவைக்க வேண்டும் என்று நெதன்யாகுவை பைடன் கேட்டுக்கொண்டாா்.
அதனை ஏற்று, தினமும் 4 மணி நேரத்துக்கு காஸாவில் தாக்குதலை நிறுத்திவைக்க இஸ்ரேல் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த தினசரி தாக்குதல் நிறுத்தம் வியாழக்கிழமை (நவ. 9) முதல் அமலுக்கு வருகிறது.
ஹமாஸ் அமைப்பினரின் கோட்டையாகத் திகழும் காஸா சிட்டிக்குள் நுழைந்து அவா்களை வேட்டையாடுவதற்காக அந்த நகரை நோக்கி இஸ்ரேல் ராணுவம் முன்னேறி வருகிறது.
இந்த நிலையில், காஸா சிட்டியிலும் வடக்கு காஸா பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தெற்கு காஸாவுக்கு வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது.
அதற்காக, குறிப்பிட்ட நேரத்துக்கு தாக்குதல் நிறுத்தம் மேற்கொள்வதாகவும் ராணுவம் கூறியது.அதை அடுத்து, நடைபயணமாகவும், கழுதை வண்டிகளிலும் அந்த நகரிலிருந்து ஆயிரக்கணக்கானவா்கள் தெற்குப் பகுதியை நோக்கி புதன்கிழமை முதல் வெளியேறி வருகின்றனா்.
இந்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறுவதற்கு வசதியாக தினமும் 4 மணி நேரத்துக்கு தாக்குதல் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அரசு தற்போது அறிவித்துள்ளது.
Reported by:N.Sameera