ஆப்கானைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் பயங்கரவாதிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என அதிரடி கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னரும் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு அஸ்ரப் கானி அரசு எதுவும் ஆகாது என்றே அமெரிக்கப் புலனாய்வுத் துறை தெரிவித்தது. தலிபான்களின் வலிமையை அமெரிக்கா கணிக்கத் தவறிவிட்டது, இதனால் தான் வெறும் 10 நாட்களில் ஆப்கனை தாலிபான்களால் கைப்பற்ற முடிந்தது. தலிபான்கள் தலைமையில் அமையும் ஆப்கன் அரசை அங்கீகரிப்பது குறித்து உலக நாடுகள் முடிவெடுத்து வருகின்றன. சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலிபான்களை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “கனடா ஏற்கனவே நீண்ட காலமாகவே தலிபான்களைப் பயங்கரவாதிகளாக அங்கீகரித்து வருகிறது. அதனால்தான் அவர்கள் பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளனர். எனவே, அடுத்த கட்டமாக அவர்கள் மீது விதிக்கப்பட வேண்டிய பொருளாதாரத் தடைகள் குறித்து முடிவெடுக்கலாம். இது குறித்து ஜி7 மாநாட்டில் ஆலோசித்து தேவையான முடிவு எடுக்கப்படும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதிக்குள் அனைத்துப் படைகளும் வெளியேறிவிடும் என அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதற்குள் அங்கிருக்கும் மக்களைத் தாயகம் அழைத்து வர பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. ஆனால் மிகக் குறைவான நாட்களே உள்ளதால் அங்கிருக்கும் பல்லாயிரக் கணக்கான மக்களை வெளியேற்றுவது கடினம் என்றே ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் தெரிவித்துள்ளன. மேலும், அமெரிக்கா தனது காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. மறுபுறம் காலக்கெடு நீட்டிக்கப்பட்டால் மோசமான விளைவுகளை அமெரிக்க சந்திக்க வேண்டியிருக்கும் எனத் தாலிபான்கள் எச்சரித்துள்ளன.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்துக் கூற மறுத்துவிட்டார். தற்போதைய சூழலில் ஆப்கனில் சிக்கியுள்ள கனடா மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வருவதே அரசின் ஒரே நோக்கம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். காபூலிலிருந்து கனடா நாட்டு மக்களை அழைத்து வர இதுவரை நான்கு விமானங்களை அந்நாட்டு அரசு இயக்கியுள்ளது. இதன் மூலம் 436 கனடிய மக்கள் ஆப்கனில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reported by : Sisil.L