தமிழ்நாட்டிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட பார்வதி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

தமிழ்நாட்டின் கும்பகோணம் மாவட்டம் தண்டன்தோட்டம் பகுதியில் நந்தனபுரிஸ்வரர் என்ற சிவன் கோவில் உள்ளது.


இந்தக் கோவிலில் இருந்து 1971-ஆம் ஆண்டு கடவுள் பார்வதியின் சிலை உள்பட 5 சிலைகள் திருட்டுப் போயின. இந்தத் திருட்டு குறித்து 2019-ஆம் ஆண்டு கோவில் அறங்காவலர் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு பொலிஸில் புகாரளித்தார்.

புகாரைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு பொலிஸார் கடத்தப்பட்ட சிலைகள் எங்கு கொண்டு செல்லப்பட்டன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.


திருட்டுப்போன சிலைகளில் கடவுள் பார்வதியின் சிலை 52 சென்ரி மீற்றர் உயரம் கொண்டதாகும். 12-ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சேர்ந்த இந்தச் சிலையின் தற்போதைய மதிப்பு 1.69 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், நந்தனபுரிஸ்வரர் சிவன் கோவிலில் இருந்து 1971ஆம் ஆண்டு திருடப்பட்ட கடவுள் பார்வதியின் சிலை 50 ஆண்டுகளுக்குப் பின் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கடவுள் பார்வதியின் சிலை இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் கிளையைக் கொண்டுள்ள பொன்ஹம்ஸ் என்ற சர்வதேச ஏல நிறுவனத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.


ஏல நிறுவனத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அந்தச் சிலையை மீட்டு மீண்டும் நந்தனபுரிஸ்வரர் கோவிலுக்கே கொண்டுவர தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *