தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை நியமிக்க பங்காளிக் கட்சிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகியவற்றின் தலைவர்கள் நேற்று(31) யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலமையகத்தில் கூடி ஆராய்ந்தனர்.
இதன்போதே மேற்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இந்த முடிவை உடனடியாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராஜா, சீ.வீ.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம் ஆகியோரும் புளொட் சார்பில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், க.சிவநேசன் ஆகியோரும் ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் இந்த கலந்துகொண்டனர்.
இதன்போது, தேர்தல்கள் திணைக்களத்தால் அண்மையில் விடுக்கப்பட்ட அறிவித்தல் ஒன்றை சுட்டிக்காட்டிய சீ.வீ.கே.சிவஞானம் கூட்டணி கட்சிகள் அனைத்தும் செயலாளர்களை அறிவிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்தே, பங்காளிக் கட்சிகள் மாவை சேனாதிராஸாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக நியமிப்பதற்கு தீர்மானித்ததாகக் கூறப்படுகிறது.