இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவியாக வழங்குவார்கள் என்று அக்கட்சி இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த நோக்கத்துக்காக ஏற்கனவே ஒரு கோடி ரூபா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை மக்களுக்கு உதவ நன்கொடை வழங்குமாறு ஆளும் திமுகவின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திமுகவின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என அக்கட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரப் பாதிப்பில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ, உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கவும், அவற்றை இலங்கைக்கு அனுப்பவும் தமிழக அரசுக்கு நன்கொடை அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கடந்த செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
Reported by : Sisil.L