டைட்டானிக் கப்பல் பனிப் பாறையில்  முட்டியதன் பின்னரே நான் அதனை பொறுப்பேற்றுள்ளேன்.ஜனாதிபதி ரணில்

டைட்டானிக் கப்பல் பனிப் பாறையில்  முட்டியதன் பின்னரே நான் அதனை பொறுப்பேற்றுள்ளேன். பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கப்பலை  காப்பாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன்’’ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று முன்தினம் (30) பிற்பகல் நடைபெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 32வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,

“தேயிலை உற்பத்தித் துறையில் கடந்து வந்த இக்கட்டான நிலைமைகள் தொடர்பில் அதன் தலைவர் கூறியிருந்தார். டைட்டானிக் கப்பல் பனிப் பாறையில்  முட்டியதன் பின்னரே நான் அதனை பொறுப்பேற்றுள்ளேன்.  நான் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். பொருளாதார நெருக்கடியை சந்தித்திருப்பதாக பிரகடனப்படுத்தியுள்ளோம்.  மக்களுக்குப் போதுமான  அளவு  உண்பதற்கு   உணவு இருக்கிறது என்பதையும் முதலில் உறுதி செய்தாக வேண்டும்.

இந்த நெருக்கடியுடன் எமது பொருளாதாரம்  தடைப்பட்டுள்ளது. பணவீக்கம், நிதி நெருக்கடி ஆகிய அனைத்தும் எமது பொருளாதாரத்திற்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளன.  அதிலிருந்து மீள வேண்டும்.

முதலாவதாக நாம் எம்மிடமுள்ள வெளிநாட்டுக் கையிருப்பை தக்க வைத்துக் கொள்வதுடன் இறக்குமதியை மட்டுப்படுத்த வேண்டும். அதன் ஊடாக, எம்மால் எரிபொருள், உரம் மற்றும் மருந்து ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். வருமானம் இல்லாமல் போனதால் எமக்கு கட்டணங்களைச் செலுத்துவதற்கும் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போயுள்ளது. எனினும்   1.7 மில்லியன் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்கவும்  கடன்களை மீளச்  செலுத்தவும் வேண்டியுள்ளது என்பதை நாம்  கருத்திற்கொண்டு  செயற்பட வேண்டும்.

நாம் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக அறிவித்துள்ளோம். முதலாவதாக நாம்  வங்குரோத்தடைந்துள்ளோம் எனும் நிலையை மாற்றுவதற்கு அவசியமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளோம் என்பதை உறுதிபடுத்த வேண்டும். அதற்காக நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் கலந்துரையாட வேண்டும். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு அமைப்பும் இதைச் செய்யுமாறு எம்மிடம் வலியுறுத்தியுள்ளன.

2019 ஆம் ஆண்டு வரை எம்மிடம் ஒரு திட்டம் இருந்தது. எனவே நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஆழமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும். அதனை தவிர எம்மிடம் வேறு தெரிவு  எதுவும் இல்லை. இவ்வருடம் எமது பொருளாதார வளர்ச்சி வீதம் 8 சதவீத மறைப்பெருமானமாக அமைந்திருக்கிறது. கடந்த வருடம்  மறைப்பெருமானத்திலே நாட்டின்  வளர்ச்சி வீதம் காணப்பட்டது. அடுத்த வருடம் இது 3 சதவீதமாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்குமென அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இது ஒப்பீட்டளவில் மிக மோசமாகவே இருக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது கவலையளிக்கும் விடயமாகும். இதனால் ஐரோப்பியா மற்றும் ஏனைய நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கத்தால் வாழ்க்கைச் செலவும் அதிகரிக்கும். இது  ஆடை, தேயிலை, கோப்பி ஆகியவற்றின் ஏற்றுமதியில்  வீழ்ச்சியை ஏற்படுத்தி பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே நாம் ஒருவாறாக இவ்வருடத்தைக் கடந்து அடுத்த வருடத்துக்குச் செல்ல வேண்டும். சுமார் இரண்டு  வருடங்களை நாம் சமாளிக்க வேண்டும். எமது வருமானம் 15% இலிருந்து  8.5%ஆக குறைந்துள்ளது. எனவே நாம் மீண்டும் 15% வருமானத்தைப் பெற வேண்டியுள்ளது. 2026  இல் இந்த இலக்கை அடைய வேண்டும்.  நான் நான்கு வருட நிகழ்ச்சித் திட்டத்துக்குச் சென்றேன். இரண்டு வருடங்களுள் அதனை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. 2023 ஆம் ஆண்டு இலங்கைக்கு மட்டுமன்றி உலக அளவில் மிக மோசமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயம் உள்ளிட்ட அனைத்துக்கும் வரி அறவிட வேண்டியுள்ளது. அதனைத் தவிர எம்மிடம் வேறு வழியில்லை. நாம் அதை படிப்படியாக செய்திருக்கலாம் என்று நான் நினைத்தாலும் எமக்கு பணம் தேவைப்பட்டதால் எம்மால் அவ்வாறு செய்ய முடியவில்லை. கடன் மறுசீரமைப்பு  மேற்கொள்ள வேண்டியுள்ளது. சாதாரண மக்கள் வாழ்வதற்கு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே முதலாவதாக நாம் தற்போதுள்ள நெருக்கடியை மீளகட்டமைக்க வேண்டும்.

எனவே நாம் எமது கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும். அதற்காகவே நான் முதலில் பாரிஸ் கிளப்பிற்குச் சென்றேன். அதில் உள்ளவர்கள் அனைவரும் மேற்குல நாடுகளையும், ஜப்பானையும் சேர்ந்தவர்கள். ஆனால் நாம் தனித்துவமானதொரு நிலையிலேயே இருக்கின்றோம். எமக்கு கடன் வழங்க முன்வந்துள்ள மூன்று நாடுகளுள் ஒன்று மாத்திரமே பாரிஸ் கிளப்பிற்கு சொந்தமானது. மற்றைய இரண்டும் அதில் அங்கத்துவம் வகிக்காத நாடுகள் ஆகும். அவை இந்தியா மற்றும் சீனாவாகும்.

நான் ஜப்பானுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதோடு இந்தியா மற்றும் சீனாவுடன் தற்போது  பேச்சுக்களை ஆரம்பித்துள்ளேன். இருதரப்பு விடயங்களை ஆராயும் வகையில் நாம் பொதுவானதொரு மேடையில் இது தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம். இதுவே  நாம் முன்னெடுக்க வேண்டிய செயன்முறையாகும்.

Reported by:Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *