எரிபொருள் நெருக்கடி காரணமாக நுவரெலியாவில் மரக்கறி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அகில இலங்கை கூட்டு விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அருண சாந்த ஹெட்டியாராச்சி இன்று நுவரெலியாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
வறண்ட காலநிலையால், விவசாயிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவே அவர்கள் தங்கள் தோட்டங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய வேண்டியுள்ளது.
தண்ணீரை உறிஞ்சுவதற்கு டீசல் மோட்டார்கள் பயன்படுத்தப்படுவதால், தற்போதைய சூழ்நிலையில், எரிபொருள் நிரப்பும் நிலையங் களில் இருந்து டீசல் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பொருளாதார மையங்களுக்கு காய்கறிகள் வந்தாலும், லொறிகளில் டீசல் தீர்ந்து விட்டதால், விற்பனையாளர்கள் அவற்றை எடுத்துச் செல்வது அரிதாக உள்ளது.
வியாபாரம் செய்யும் எமக்கு கொழும்பு செல்ல டீசல் தட்டுப்பாடும் உள்ளது.
இதனால், காய்கறிகளுக்கான போக்குவரத்து செலவு அதிகமாகி, காய்கறி எடுக்க வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இப்படியே போனால் காய்கறிகளைக் கொண்டு செல்ல முடியாமல் கடும் நெருக்கடி ஏற்படும்.
எனவே, காய்கறிகள் போக்குவரத்துக்கும் டீசல் வழங்க வேண்டும் என அரசை கேட்டுக் கொள்கிறோம்.
நுவரெலியாவுக்கு இந்த நாட்களில் அதிகளவான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால் நுவரெலியாவில் தமது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியாத நிலை காணப்படுவதாக நுவரெலியா சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மஹிந்த தொடம்பேகமகே தெரிவித்தார்.
நுவரெலியா பிரதேசத்துக்கு எரிபொருள் விநியோகத்துக்கு முன்னுரிமை வழங்கினால் அது சுற்றுலாத்துறைக்கு இடையூறாக இருக்காது என தொடம்பேகமகே மேலும் தெரிவித்தார்.
———–
Reported by : Sisil.L