ஜப்பானில் கடந்த 18 ஆம்திகதி ஏற்பட்ட “நன்மடோல்” சூறாவளி தெற்கு பகுதியில் உள்ள கியூஷு தீவினை தாக்கியுள்ளது.
தீவின் தெற்கு முனையில் உள்ள ககோஷிமா நகருக்கு அருகே புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் மிக பலத்த காற்று வீசியதால் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. தெற்கு பகுதியில் உள்ள தீவுகள் முழுவதும் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் 500மி மீ மழை பதிவாகிaது.
இதனால் கியூஷு தீவு முழுவதையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கியூஷு தீவில் கரைகடந்த சூறாவளி, ஜப்பானின் வடக்கு பகுதி நோக்கி நகர்ந்து வருகிறது. மத்திய ஜப்பான் வழியாக தலைநகர் டோக்கியோவை நோக்கி நன்மடோல் சூறாவளி நகர்ந்து வருவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து சூறாவளியின் பாதையில் உள்ள நகரங்களில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களுக்கு மாற்றும் பணி போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிவேக புல்லட் ரயில், கப்பல் மற்றும் விமான போக்குவரத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
Reported by :Maria.S