சிறைச்சாலைக்குள் துப்பாக்கியைக் காட்டி தமிழ் அரசியல் கைதி களை மண்டியிட வைத்த சம்பவத்தின் எதிரொலியாக எழுந்த எதிர்ப்பை அடுத்து; சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று தான் பதவி விலகுவதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைகளுக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகள் சிலரை துப்பாக்கியைக் காட்டி மண்டியிட வைத்தார் என லொஹான் ரத்வத்த மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக அமைச்சுப் பதவியிலிருந்து விலகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறைச்சாலை நிர்வாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு அறிவித்திருந்தார். தற்போது இத்தாலியில் இருக்கும் பிரதமர், லொஹான் ரத்வத்தையுடன் நேற்றுக்காலை தொலைபேசியில் தொடர்பு கொணடு; அவரை பதவி விலகுமாறு அறிவித்தார் எனவும் அதன் பின்னர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவையும் அவர் தொலைபேசியில் தொடர்புகொண்ட தாகவும் செய்தி வெளியாகியிருந்தது. இதேநேரம், லொஹான் ரத்வத்த மீதான குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணைக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
————–
Reported by : Sisil.L