குற்றங்கள் செய்தால் அந்தத் தண்டனை உறுதி : தலிபான்கள் அறிவிப்பு

எங்களது முந்தைய ஆட்சியில் நிறைவேற்றியதைப் போல மத சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனைகள் இந்த முறையும் வழங்கப்படும் என்று ஆப்கானிஸ்தான் சிறைத்துறை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.


ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு தலிபான்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி புதிய அரசாங்கத்தை அமைத்து உள்ளனர். அங்கு ‌ஷரியத் சட்டப்படி ஆட்சி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.


இந்த நிலையில் குற்றங்கள் செய்தால் கை-கால்கள் வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். முன்பு தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன.


இது குறித்து ஆப்கானிஸ்தான் நாட்டின் சிறைத்துறை பொறுப்பாளர் முல்லா நூருதீன் துராபி கூறியதாவது:-
எங்களது முந்தைய ஆட்சியில் நிறைவேற்றியதைப் போல மதச் சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனைகள் இந்த முறையும் வழங்கப்படும். மரண தண்டனைகள், கை-கால்களை வெட்டுதல் போன்ற தண்டனைகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.


நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உறுப்புகளை துண்டிக்கும் தண்டனை மிகவும் அத்தியாவசியமானது. 1990 ஆம் ஆண்டுகளில் இந்தத் தண்டனைகள் பொது இடங்களில் நிறைவேற்றப்பட்டன.


இந்தத் தடவை பொதுமக்கள் முன்னிலையில் இல்லாமல் தனி இடங்களில் தண்டனைகள் நிறைவேற்றப்படலாம். முன்பு பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றுவது குறித்து சர்வதேச அளவில் சர்ச்சை எழுந்தது தேவையில்லாதது. எங்களது சட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்று யாரும் எங்களுக்கு சொல்லத் தேவையில்லை.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *