உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொண்டால் மட்டுமே புதிய உறுப்பு நாடுகள் நேட்டோவில் சேர முடியும். ஆனால், ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைய துருக்கி முட்டுக்கட்டையாக உள்ளது. “நாங்கள் பயங்கரவாத இயக்கமாக கருத்தும் குர்திஷ்தான் அமைப்பின் ஆதரவாளர்களுக்கு ஸ்வீடன் ஆதரவு கொடுப்பதாக துருக்கி குற்றஞ்சாட்டிவருகிறது. மேலும், தங்கள் நாட்டில் உள்ள குர்திஷ் அமைப்பு ஆதரவாளர்கள் சிலரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஸ்வீடனிடம் துருக்கி வலியுறுத்தி வருகிறது.
இதன் காரணமாக ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைவதை துருக்கி தடுத்து வருகிறது. இதனால், துருக்கி – ஸ்வீடன் இடையே தூதரக ரீதியில் உரசல் நீடித்து வருகிறது.
இதனிடையே, நேட்டோவில் தங்கள் நாடு இணைய விடாமல் தடுக்கும் துருக்கிக்கு எதிராக ஸ்வீடனில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்வீடனின் ஸ்டேம் குர்ஸ் கட்சி தலைவர் ரஸ்முஸ் பலுடன் தலைமையில் துருக்கிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்லாமில் உள்ள துருக்கி தூதரகம் முன் ரஸ்முஸ் பலுடன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது துருக்கி மற்றும் அந்நாட்டின் அதிபர் எர்டோகனுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது, ஸ்வீடனில் கருத்து சுதந்திரத்தை ஒடுக்க துருக்கி அதிபர் எர்டோகன் முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவும் அவர் கோஷங்களை எழுப்பினார். அப்போது, இஸ்லாமிய மதத்தின் புனித நூலான குர் ஆனை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இஸ்லாமிய மதத்தின் புனித நூலான குர் ஆனை தீ வைத்து எரித்த ஸ்வீடன் அரசியல்வாதி ரஸ்முஸ் பலுடனை கைது செய்ய வேண்டும் என்று துருக்கி தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்வீடனுக்கு துருக்கி தெரிவித்துள்ளது. மேலும், நேட்டோ அமைப்பு இணைப்பு தொடர்பாக ஸ்வீடன் அதிகாரிகள் துருக்கி வரவிருந்த நிலையில் அந்த பயணத்தை துருக்கி ரத்து செய்துள்ளது.
இந்நிலையில், இஸ்லாமிய மத புனித புத்தகமான குர் ஆனை எரித்த ஸ்வீடன் அரசியல்வாதி ரஸ்முஸ் பலுடனுக்கு துருக்கி எழுத்தாளர் ரம்ஜான் இசொல் கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக துருக்கி எழுத்தாளர் ரம்ஜான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
ஸ்வீடனில் முறைதவறி பிறந்தவர் இன்று குர் ஆனை தீ வைத்து எரித்துள்ளார். இஸ்லாமியர்களாக நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? குர் ஆனை எரித்த அந்த போக்கிரியை நான் பிடித்தேன் என்றால் நான் அவரை உயிருடன் தீ வைத்து எரித்துவிடுவேன்’ என பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Reported by:Maria.S