கனடாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான கியூபெக்கில் கொரோனா தொற்றுக்குள்ளான சில அத்தியாவசிய சுகாதார பணியாளர்கள் தொற்றுடன் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம் மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டியூப் (Christian dube) செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மாகாணத்தில் அத்தியாவசிய சுகாதாரத் தொழிலாளர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுவதால் தொற்றுக்குள்ளானவர்களும் தொடர்ந்து பணியாற்ற அனுமதிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை எனவும் அவர் கூறினார்.
அத்துடன் சுகாதார சேவைகள் இடையூறின்றி தொடர்ந்து செயற்படுவதை உறுதி செய்ய இதனை அனுமதிக்க வேண்டியுள்ளது என்றும் கிறிஸ்டியன் டூப் தெரிவித்தார். இதேவேளை ஒமிக்ரோன் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் கியூபெக்கில் தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மாகாணத்தில் 12,833 புதிய தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டனர்.
இது கனடாவிலுள்ள எந்தவொரு பிராந்தியத்திலும் இல்லாத ஒரு நாள் அதிகபட்ச தொற்று நோயாளர் தொகை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒமிக்ரோன் தொற்று மிகவும் அதிவேகமாகப் பரவுவதால் சுகாதாரப் பணியாளர்களும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஏராளமான அத்தியாவசிய சுகாதாரப் பணியாளர்களை இடைநிறுத்த வேண்டியுள்ளது.
இது கியூபெக் முழுவதும் சிகிச்சையளிப்பதற்கான திறனைக் குறைக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாக கியூபெக் சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டியூப் (Christian dube) தெரிவித்தார். இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் கீழ் தொற்று உறுதி செய்யப்பட்ட ஊழியர்கள் முன்னுரிமை மற்றும் இடர் முகாமைத்துவ நியதிகளின் கீழ் தொடர்ந்து பணியாற்ற முடியும் என தாங்கள் முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, கியூபெக்கில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஜனவரி 4 முதல் கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் எனவும் டியூப் தெரிவித்தார். இதேவேளை கடந்த வாரம், மதுபான சாலைகள், ஜிம்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் களியாட்ட விடுதிகளை மூட கியூபெக் அரசு உத்தரவிட்டது.
அத்துடன், வீட்டில் இருந்து மட்டுமே வேலை செய்யும்படி மக்களைக் கோரியது. மேலும் குடும்பத்தினர் தவிர்ந்த வெளியாட்கள் 6 பேருக்கு மேல் வீடுகளில் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Reported by : Sisil.L