கிழக்கு கனடாவின் கடற்பகுதியில் ஸ்பெயின் நாட்டு மீன்பிடிப் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 7 மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை கனடா மற்றும் ஸ்பெயின் அதிகாரிகள் தற்போது உறுதி செய்துள்ளனர்.
குறித்த விபத்தில் சிக்கியவர்களில் 7 பேரின் சடலங்களை கைப்பற்றியுள்ளதாகவும், மூவரை உயிருடன் மீட்டுள்ளதாகவும் கனேடிய மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நியூஃபவுண்ட்லாந்திலிருந்து கிழக்கே 250 கடல் மைல் தொலைவில் கப்பல் மூழ்கியதாகவும், அப்போது அதில் 24 மீனவர்கள் இருந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கடினமான வானிலைக்கு மத்தியில் எஞ்சிய 14 மீனவர்களைத் தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்குள்ளான கப்பலில் 16 ஸ்பெயின் நாட்டவர்கள், ஐந்து பெருவியர்கள் மற்றும் மூன்று கானா நாட்டவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர் என ஸ்பெயினின் போக்குவரத்து அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.
விபத்தில் சிக்குவதற்கு முன்னர் குறித்த கப்பலிலிருந்து உதவி கேட்டு கடலோர காவல் படைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்து 5 மணி நேரத்தின் பின்னர் இன்னொரு ஸ்பெயின் நாட்டு மீன்பிடிக் கப்பல் அப்பகுதி வழியாக கடந்து சென்றதாகவும், அவர்களே உயிருக்குப் போராடிய நிலையில் தத்தளித்த மூவரை மீட்டதாகவும் 7 சடலங்களையும் கரையில் சேர்த்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
உயிருடன் மீட்கப்பட்ட மீனவர்கள் மூவரையும் கனேடிய கடலோர காவல் படை ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்றனர். இதனிடையே மாயமானவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், கனேடிய நிர்வாகத்தால் ஹெலிகொப்டர், இராணுவ விமானம், கடலோர காவல் படைக்கான கப்பல் மற்றும் பல என்ணிக்கையிலான படகுகள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
Reported by : Sisil.L