கனடாவில் வீடொன்றில் புகுந்த கரடி

கனேடிய மாகாணமான ஆல்பர்ட்டாவில் வீடு ஒன்றிற்குள் கரடி ஒன்று அழையா விருந்தாளியாக நுழைய, அதனால் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது. வடக்கு ஆல்பர்ட்டாவில் கரடிகளை அடிக்கடி காணமுடியும். ஆனால், வீடு ஒன்றிற்குள்ளேயே கரடி புகுந்ததாக அதிக செய்திகள் வெளியானதில்லை.
இந்நிலையில், Fort McMurray என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டுக்குள் கரடி புகுந்துவிட்டது.

அந்த வீட்டில் வாழும் Sean Reddyயும் அவரது நான்கு மகன்களில் இருவரும் வீட்டில் இருக்கும்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தங்கள் வீட்டுக்கு வெளியே கரடி ஒன்று நடமாடுவதைக் கண்ட Reddy, அது திரும்பி காட்டுக்குள் போய்விட்டதா என்று பார்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.

அப்போது Reddyயின் இளைய மகன் வந்து, அப்பா வீடு முழுவதும் கரடி கீறிய தடம் இருக்கிறது என்று கூற, அப்பா அதிர்ச்சியடைந்திருக்கிறார். அதற்குள் அவரது மூத்த மகன் வந்து, அப்பா, வீட்டுக்குள் கரடி நிற்கிறது என்று கூற, அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


 ஒரு பெரிய கறுப்புக் கரடி, படுக்கையறையின் ஜன்னலில் அமைக்கப்பட்டிருந்த அடைப்பை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்திருக்கிறது.


வீட்டை அது தலைகீழாக புரட்டிப்போட, Reddyயும் மகனும் அதிர்ச்சியடைந்தார்களே தவிர, பயப்படவில்லை. மெதுவாக, அந்தக் கரடி திரும்பி வராத வகையில் பொருட்களை வழியெங்கும் போட்டு, அது வந்த வழியாகவே அதை திருப்பி அனுப்ப முயற்சி செய்திருக்கிறார்கள்.


அவர்கள் எதிர்பார்த்தது போலவே, வந்த வழியாகவே அந்த கரடி வீட்டை விட்டு வெளியேறினாலும், உடனடியாக அது காட்டுக்குள் செல்லவில்லையாம். சற்று நேரம் அந்தப் பக்கத்தில் உலாவிவிட்டு அதற்குப் பிறகுதான் அங்கிருந்து சென்றிருக்கிறது.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆல்பர்ட்டா வனத்துறை அதிகாரிகள் Reddyயின் வீட்டருகே கரடியைப் பிடிக்க கூண்டு ஒன்றை அமைத்துள்ளார்கள்.


Fort McMurray கரடிகள் நடமாடும் ஓரிடம்தான். ஆனாலும், வீடுகளுக்குள் பொதுவாக கரடிகள் நுழைவதில்லை என்கிறார்கள் அதிகாரிகள். குளிர்காலத்தை சமாளிப்பதற்காக, சில நேரங்களில், கிடைத்த உணவை உண்பதற்காக கரடிகள் இப்படிச் செய்வதுண்டாம். ஆனால், அப்படியே அது மக்கள் வாழும் இடங்களுக்கு உணவுக்காக வருவதை வழக்கமாக்கிக் கொண்டால், பொதுமக்களுக்கு அபாயமாகி விடும்.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *