உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரோன் வைரஸ் தற்போது கனடாவிலும் வேகமெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி கனடாவில் இரண்டு நபர்களுக்கு புதிய வகை ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஒமிக்ரோன் வைரசின் பரவல் காரணமாக ஏழு ஆபிரிக்க நாடுகளின் பயணத்துக்கு கனடா தடை விதித்திருந்தது. ஆனால் அதில் நைஜீரியா இடம்பெறவில்லை.
இந்நிலையில் அண்மையில் நைஜீரியாவுக்குச் சென்ற இரு நபர்களிடம் புதிய வகை ஒமிக்ரோன் வைரஸ் நோயின் பாதிப்புகளைக் கண்டறிந்துள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.
பொதுச் சுகாதார அதிகாரிகள், அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்களின் தகவல்களை சேகரித்து வருகின்றனர் எனவும் தற்போது இரு நோயாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாதிப்புகளும் தலைநகர் ஒட்டாவாவில் இருப்பதை ஒன்ராறியோ அரசாங்கம் உறுதிப்படுத்தியது.
இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா நோயாளிகளின் சோதனை மற்றும் கண்காணிப்பு ஒன்றாரியோவில் கவலைக்குரியது. கனடாவின் பொது சுகாதார முகாமையால் இன்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. கண்காணிப்பு மற்றும் சோதனை தொடர்வதால், இந்த மாறுபாட்டின் பிற தொற்றுகள் கனடாவில் கண்டறியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே ஒமிக்ரோன் பாதிப்பு காரணமாக அரபு நாடுகளான சவூதி அரேபியா, ஓமான் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தென்ஆபிரிக்கா, சிம்பாப்வே, பொட்ஸ்வானா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணத்தடையை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
——————
Reported by : Sisil.L