உள்ளூராட்சி மன்ற சட்ட திட்டங்களுக்கு அமைய, உரிய திகதியில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்திற்கு இன்று(18) மீண்டும் உறுதியளித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், உயர் நீதிமன்றத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் இராணுவ கேர்ணல் W.M.R.விஜேசுந்தர தாக்கல் செய்த ரிட் மனுவை தள்ளுபடி செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று(18) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனை கூறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்டோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து தரப்பினரும் முன்வைத்த கருத்துகளை பரிசீலித்த, பிரியந்த ஜயவர்தன, எஸ்.துரைராஜா மற்றும் பி.பத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம், மனுக்களை எதிர்வரும் 10ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.
Reported by :Maria.S