உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள தேசிய குழுவின் செயற்பாடுகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பது உள்ளிட்ட எதிர்கால நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையுமா என சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெறுவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஆணைக்குழுவின் எதிர்பார்ப்பிற்கு அமைய, மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான திட்டங்களை தயாரிக்கும் போது புதிய குழுவின் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்தே
ஆலோசனைகள் பெறப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கமைய எதிர்கால நடவடிக்கைகளை திட்டமிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
எல்லை நிர்ணயத்திற்காக நியமிக்கப்பட்ட தேசியக் குழுவின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிக்குள் வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருடம் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் திட்டத்தில் ஏதேனும் முரண்பாடுகள் காணப்படுமா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதனிடையே, 21ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழுக்களுக்கு மீண்டும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Reported by :Maria.S