சோழ சாம்ராஜ்யத்தின் புராதன பெருமையை எழுத்துருவில் கரங்களில் தவழச் செய்த ஒரு நாவல், நீண்ட நெடிய முயற்சியின் பலனாய் நாளை (செப்டம்பர் 30) திரை வடிவில் உங்களை மகிழ்விக்க வருகின்றது.
உலகெங்கிலும் நாளை முதல் உங்கள் கண்களையும் கருத்தையும் மகிழ்விக்க மீள உயிர்த்தெழுந்து வருகின்றார்கள் சோழர்கள்!
1950 ஆம் ஆண்டு தமிழகத்தின் கல்கி வார இதழில் ரா.கிருஷ்ணமூர்த்தி எனும் எழுத்துச் சிற்பி மூன்றாண்டுகளாய் செதுக்கிய ஜனரஞ்சக நாவலே பொன்னியின் செல்வன்.
தமிழ் இலக்கிய வரலாற்றின் பொற்காலமாக வர்ணிக்கப்படும் சோழர்களின் வரலாற்றுடன் தனது அபரிமித புனைவாற்றலையும் புகுத்தி கல்கி யாத்த பொன்னியின் செல்வன், பல தலைமுறைகளும் வாசிக்க விரும்பும் வரலாற்றுப் புதினமாகும்.
ஜன அலையை தன்பால் அதீதமாய் வசீகரித்த இந்த நாவலை திரைக்காவியமாக்கும் முயற்சியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், உலக நாயகன் கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பிரயத்தனம் செய்திருந்த போதும், அது வாய்த்தது என்னவோ மணிரத்னத்திற்குத்தான்.
உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனும் ஐந்து மொழிகளில் நாளை முதல் பொன்னியின் செல்வனைக் காணலாம்.
தமிழ்பேசும் மக்களின் சக்தியான சக்தி தொலைக்காட்சியும் தன்னுடன் என்றும் இணைந்திருக்கும் நேயர் படையை மகிழ்விக்கும் நோக்கில், கொழும்பு வௌ்ளவத்தையில் உள்ள முன்னணி திரைக்களத்தில் பொன்னியின் செல்வன் மூலம் சோழர் படையை நாளை காண்பிக்கின்றது.
Reported by:Maria.S