மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மணல் வியாபாரி ஒருவரிடம் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட விசேட புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இரண்டு பேரையம் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று வியாழக்கிழமை (26) உத்தரவிட்டார்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றிவரும் விசேட புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவர் மணல் வியாபாரி ஒருவரிடம் நீண்ட நாட்களாக இலஞ்சமாக பணம் வாங்கிவந்துள்ள நிலையில் குறித்த மணல் வியாபாரி இது தொடர்பாக கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இலஞ்ச ஊழல் ஒழுப்பு ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான நேற்று புதன்கிழமை (25) பிற்பகல் கொக்கட்டிச்சோலை நகர்பகுதியில் உள்ள வீதியில் மாறுவேடத்தில் இலஞ்ச ஊழல் ஒழுப்பு பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன் போது அங்கு சென்ற விசேட புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவர் குறித்த மண் வியாபாரியிடம் இலஞ்சமாக 2 ஆயிரம் ரூபாவை வாங்கும் போது மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட பொலிஸ் விசேட புலானர்வு பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட்டும், கான்ஸ்டபிளும் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது இருவரையம் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் இவர்களுக்கு எதிராக வழக்கை கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் பதிவு செய்து ஆஜர்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
Reported by:K.S.Karan