தீவை அண்மித்துள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்தும் இலங்கையை சுற்றி நிலை கொண்டிருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (30) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (30) மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் 3 மணித்தியாலங்கள் பெய்த கடும் மழையினால் நுவரெலியா, பதுளை, பண்டாரவளை, ஹாலிஎல, எல்ல, பசறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.
ஆபத்தான பகுதிகளிலுள்ள மக்களை இன்று இரவு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மத்திய மலையகத்தின் பல பிரதேசங்களிலும் பலத்த மழை பெய்து வருவதுடன் காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயா நிரம்பி வழிவதாகக் கூறப்படுகிறது.
குறைந்த காற்றழுத்த தாழமுக்கம் நாட்டை அண்மித்த கிழக்கு கரையோரத்தில் தற்போது நிலைகொண்டுள்ளதால், நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
———————-
Reported by : Sisil.L