இரட்டைப் பிரஜாவுரிமையை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சோதனையிடுவதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பிறந்தநாள், பெயர்கள் மற்றும் தேசிய அடையாள இலக்கங்கள் அடங்கிய ஆவணத்தின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இது தொடர்பான ஆவணம் பாராளுமன்றத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைப் பிரஜாவுரிமை அல்லது அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு அவர்களுக்குள்ள தகுதி உள்ளிட்டவற்றை சோதனையிடும் அதிகாரம், பாராளுமன்றத்திற்கு உரித்துடையதல்ல எனவும் அந்த அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கே உள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நியூஸ்பெஸ்ட் வினவிய போது, இரட்டைப் பிரஜாவுரிமையை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை நீக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை எனவும் அதனை நீதிமன்றத்தினூடாக மாத்திரமே முன்னெடுக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட நபர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது எனும் சரத்து உள்ளடங்கிய அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் அண்மையில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
Reported by :Maria.S