பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது அண்மையில் குற்றங்காணப்பட்ட ஊழல் குற்றத்தை அந்நாட்டு உயர் நீதிமன்றம் நேற்று (29) இடைநிறுத்தியதோடு அவரை விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இது அவர் சிறையில் இருந்து விடுதலை பெற வழிவகுத்திருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் கீழ் நீதிமன்றத்தினால் இந்த மாதத்தில் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பையே இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இடைநிறுத்தி இருப்பதாக இம்ரான் கானின் பாகிஸ்தான் தஹ்ரீக்கே இன்சாப் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் மீது வழங்கப்பட்டிருந்த தீர்ப்பு அவர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதாகவும் இருந்தது.
இம்ரான்கானுக்கு பிணை அளிக்கப்பட்டிருப்பதாக அவரது கட்சி மற்றும் வழங்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவருக்கு எதிரான 200க்கும் அதிகமான வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஏப்ரலில் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானித்தின் மூலம் இம்ரான் கான் பதவி கவிழ்க்கப்பட்டது தொடக்கமே அவர் மீது அடுக்கடுக்காக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘வேறு எந்த வழக்கிலும் அவரை கைது செய்வதில் இருந்து நிர்வாகத்தை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கும்படி நாம் மற்றொரு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளோம்’ என்று அவரது வழங்கறிஞர்களில் ஒருவரான கொஹார் கான் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
‘வேறு ஏதேனும் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டால் அது அவரது சட்ட உரிமைக்கு எதிரானது’ என்றும் அவர் தெரிவித்தார்.
இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்தபோது தமக்கு கிடைத்த பரிசுகளை முறையாக அறிவிக்க தவறியதாகவே அவர் குற்றம் காணப்பட்டார். அது தொடக்கம் அவர் மூன்று வாரங்களாக சிறை அனுபவித்தார்.
இம்ரான் கான் சிறைவைக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் வரை காபந்து அரசு ஒன்ற அமைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதங்களில் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் தேர்தலுக்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Reported by :N.Sameera