கொழும்பு காலி முகத்திடலில் சட்டத்தரணிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் இணைந்து இன்று(10) பிற்பகல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைக்கு தடை விதிக்குமாறு கோரி கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கோட்டை நீதவான் திலின கமகே நிராகரித்துள்ளார்.
அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபடுவது மீறப்பட முடியாத உரிமையாகும் என சட்டத்தரணிகள் மற்றும் தொழிற்சங்கத்தினரின் உரிமைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மன்றில் சுட்டிக்காட்டினார்.
அரசியல் கட்சிகள் பல சந்தர்ப்பங்களில் காலி முகத்திடலில் கூடி தமது அரசியல் கூட்டங்களை நடத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கூறியுள்ளார்.
விடயங்களை ஆராய்ந்த கொழும்பு கோட்டை நீதவான், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது சட்டவிரோத செயற்பாடுகளோ அல்லது வன்முறைகளோ இடம்பெறுவதற்கான ஆதாரங்கள் இல்லை என அறிவித்துள்ளார்.
ஏனையவர்களின் உரிமைகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எவ்வித தடைகளும் இல்லை என அறிவித்த நீதவான், வன்முறைகள் ஏற்படும் பட்சத்தில் அதனை தடுப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்
Reported by :Maria.S