அமெரிக்காவில் மிகவும் சக்தி வாய்ந்த விண்கல் ஒன்று விழுந்திருப்பதாக நாசா பரபரப்பு தகவலொன்றை வெளியிட்டுள்ளது.
சூரியமண்டலத்தில் கோள்களைத் தவிர பிரம்மாண்ட விண்கற்களும் சூரியனை சுற்றி வருகின்றன. சில நேரங்களில் அவை பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு வளிமண்டலத்துக்குள் நுழையும். வளிமண்டலத்தில் உள்ள காற்றின் அடர்த்தி காரணமாக, அவை வேகமாக பயணிக்கும் போது தீப்பிடிக்கவே வாய்ப்பு அதிகம்.
இதனால் விண்கற்கள் பூமியின் தரைப்பரப்பை தொடுவது மிகவும் அரிதான விடயமாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாது , பூமியில் கடற்பரப்பு அதிகமாக இருப்பதால் இப்படியான விண்கற்கள் பெரும்பாலும் கடலிலேயே விழும். இவ்வாறான நிலையில் நேற்று அமெரிக்காவின் மிஸிஸிப்பி பகுதியில் ஒரு விண்கல் விழுந்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ், லூசியானா மற்றும் மிஸிஸிப்பி ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த மக்களில் சிலர் நேற்று காலை சுமார் 8 மணி அளவில் காதைப் பிளக்கும் அளவுக்கு சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளனர். அந்தச் சத்தத்துக்கு அதிவேகத்தில் வந்து விழுந்த விண்கல் தான் காரணம் என நாசா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆராய்ச்சியாளர்கள் இதனை bolide என்று அழைக்கிறார்கள். 90 பவுண்ட் எடையும் ஒரு அடி அகலமும் கொண்ட இந்தக் கல் மணிக்கு 55,000 மைல் வேகத்தில் வந்து விழுந்திருப்பதாக நாசா தெரிவித்திருக்கிறது.
—————————-
Reported by : Sisil.L