அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு வளாகம் இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கோர அனர்த்தத்தில் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
12 மாடி குடியிருப்புக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளித்தது.
முதல் கட்டமாக 12 வயது சிறுவன் உள்பட 99க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
செய்தியாளர்களிடம் பேசிய மியாமி-டேட் தீயணைப்புத் தலைவர் ஆலன் கொமின்ஸ்கி, இரவு முழுவதும் மீட்புப் பணிகள் நடைபெற்றதாகவும் வெள்ளிக்கிழமை குழுவினர் பணியாற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அக்கம் பக்கத்தில் உள்ள குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டிட சுவர்களில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய வீட்டு உரிமையாளர்கள் சங்கம் தவறிவிட்டதாக வளாகத்தில் வசிக்கும் ஒருவர் புகார் அளித்ததாக நீதிமன்றப் பதிவுகள் காட்டுகின்றன.
————–
Reported by : Sisil.L