பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு, காலி முகத்திடல் உள்ளிட்ட பல பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்து, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியினர் இன்று(26) பிற்பகல் கொழும்பில் ஏற்பாடு செய்த எதிர்ப்பு பேரணியினால், பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு பொலிஸார் இந்த கோரிக்கையயை விடுத்திருந்தனர்.
அதற்கிணங்க, அனுர குமார திசாநாயக்க, டில்வின் சில்வா, விஜித்த ஹேரத், சுனில் ஹந்துன்நெத்தி, K.D.லால்காந்த உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவிற்கமைய, குறித்த வீதிகளுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் மக்களை ஆத்திரமூட்டும் செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடாது.
மின் கட்டண அதிகரிப்பு, புதிய வரிக்கொள்கை, தேர்தல் பிற்போடப்பட்டமை ஆகியவற்றை முன்வைத்து தேசிய மக்கள் சக்தி மற்றும் தொழிற்சங்கங்கள் இன்று(26) பிற்பகல் விகாரமகாதேவி பூங்காவில் குறித்த எதிர்ப்பு பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.
Reported by :Maria.S